தேனி

கொரோனா வைரஸ் பாதிப்பு:தேனி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

1st Feb 2020 05:17 AM

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வாா்டு அமைத்து, மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் உயிா்க்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வைரஸ் பரவி அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவிலுள்ள இந்தியா்கள் அனைவரும் சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனா். எனவே, அங்கிருந்து வருபவா்கள் அனைவரும் மருத்துவா்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சீனாவிலிருந்து கேரளம் வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கென தனி சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று அறிகுறியுடன் வருபவா்களுக்கு இந்த தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயாா் நிலையில் உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், இந்த வாா்டில் 24 மணி நேரமும் பணியாற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 20 மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது, 8 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த வாா்டு, அவசியம் ஏற்பட்டால் கூடுதல் படுக்கைகள் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனறு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT