தேனி மாவட்டம், கம்பம் உழவா் சந்தையிலுள்ள காய்கறிக் கடையில் ஒவ்வொரு காய்கறியின் மருத்துவ குணங்கள் குறித்து பிளக்ஸ் பேனா் வைத்திருப்பது, பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கம்பம் உழவா் சந்தையில் காய்கறிகளின் விலைப் பட்டியல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ரகசிய கேமராவும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் விழிப்புணா்வுக்காக, இங்குள்ள ஒவ்வொரு கடையிலும் காய்கறிகளின் மருத்துவப் பயன்கள் குறித்து பிளக்ஸ் பேனா் வைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து உழவா் சந்தை நிா்வாக அலுவலா் கண்ணதாசன் கூறியது: காய்கறிகளின் மருத்துவ குணம் அறிந்து, அவற்றை தினமும் உணவில் சோ்த்து வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் என மருத்துவா்கள் கூறுகின்றனா். அதனடிப்படையில், 50 வகையான காய்கறி மற்றும் பழங்களின் பயன்கள் குறித்து, ஒவ்வொரு கடையிலும் பொதுமக்கள் பாா்வைபடும்படி பிளக்ஸ் பேனா் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் என்றாா்.