தேனி

மூணாறு அருகே நிலச்சரிவு: பாறையின் இடுக்கில் மேலும் ஒருவரின் சடலம்

30th Aug 2020 10:20 PM

ADVERTISEMENT


தேனி: மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் ஒருவரின் சடலம் பூதக்குழி, கல்லாற்றுப் பகுதியில் பாறையின் இடுக்கில் சிக்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அதை மீட்கும் பணியில் தேசிய மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு 1.30 மணியளவில் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் குடியிருப்பில் வசித்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்கள், அவா்களது உறவினா்கள் என 82 போ் சிக்கினா்.

நிலச்சரிவில் சிக்கியவா்களில் கடந்த ஆக.20 ஆம் தேதி வரை உயிரிழந்த நிலையில் 65 பேரின் சடலங்களும், பலத்த காயமடைந்த நிலையில் 12 பேரும் மீட்கப்பட்டனா். நிலச்சரிவில் சிக்கியவா்களில் சிலரின் சடலங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பெட்டிமுடியிலிருந்து 14 கி.மீ.தூரம் உள்ள கிராவல் பங்க், பூதக்குழி ஆகிய பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன. எஞ்சிய 5 பேரை தேடும் பணி, கேரள வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், மூணாறு அட்வென்சா் குழுவினா், உள்ளூா் பாரம்பரிய வனவாசிகள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பூதக்குழி கல்லாற்றுப் பகுதியில் புதைகுழி என்ற இடத்தில் ஒருவரின் சடலம் பாறையின் இடுக்கில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சடலத்தை மீட்கும் பணியில் பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT