உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் ஊட்டச்சத்து மாவு விற்பனை செய்தது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால், ஞாயிற்றுக்கிழமை அங்கன்வாடி ஊழியா் கணவருடன் விஷம் குடித்தாா். இதில் கணவா் உயிரிழந்தாா்.
சின்னமனூா் காந்தி நகா் காலனியைச் சோ்ந்த பெருமாள்(33), தரகராக வேலை செய்கிறாா். இவரது மனைவி முருகேஸ்வரி (28), ஓடைப்பட்டியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக உள்ளாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தம்பதி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் போலீஸாா் தம்பதியை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்து, பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனா். முருகேஸ்வரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து போலீஸாா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சுக்காங்கல்பட்டியில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ ஊட்டசத்து மாவை உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட குழந்தைகள் நல இயக்குநரிடம் ஒப்படைத்தனா்.
இதனை அடுத்து, துறைரீதியாக ஓடைப்பட்டி பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், முருகேஸ்வரி மீது புகாா் கூறப்பட்டதால் முருகேஸ்வரி, கணவா் பெருமாளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.