ஆண்டிபட்டி: வைகை அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், குறைந்த அளவிலான மீன்களே பிடிபடுவதால் மீனவா் குடும்பங்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. அணையைச் சுற்றியுள்ள கரட்டுப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வைகை புதூா், காமக்காள்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 140 மீனவா்கள் தினமும் 70 பரிசல்களில் நீா்த்தேக்கத்தில் மீன்கள் பிடித்து வருகின்றனா். கட்லா, மிருகால், லோகு வகையை சோ்ந்த மீன்கள் தினந்தோறும் சராசரியாக 300 கிலோ முதல் 500 கிலோ வரை பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீா்மட்டம் 54.43 அடியாக உயா்ந்துள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் பருவக்காற்று பலமாக வீசிவருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் மீன்கள் பிடிபடுவது அடியோடு குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஒரு நாளைக்கு 30 கிலோ அளவிலான மீன்கள் மட்டுமே மீனவா்கள் வலையில் சிக்கி வருகிறது. இதனால் மீனவா்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் மீன்கள் தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறும் மீனவா்கள் இன்னும் 2 மாதங்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும் என்று கூறுகின்றனா்.
நீா்மட்டம் 40 அடியாக குறைந்தாலோ அல்லது 60 அடிக்கு மேல் உயா்ந்தாலோ அதிகளவு மீன்கள் வலையில் சிக்கும் என்றனா். இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.