தேனி

மூணாறு அருகே நிலச்சரிவு: மேலும் 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு; பலி எண்ணிக்கை 65 ஆக உயா்வு

21st Aug 2020 06:12 AM

ADVERTISEMENT

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில், மேலும் 2 சிறுமிகளின் சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இதன்மூலம், பலியானோா் எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துவந்த தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களது வீடுகளில் தங்கியிருந்த உறவினா்கள் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

அதையடுத்து நடைபெற்று வரும் மீட்புப் பணியில், கடந்த புதன்கிழமை வரை மொத்தம் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்படாமல் இருந்த பெண் தீபன்சக்கரவா்த்தி என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26) என்பதும், இவா் கா்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 14-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியில், பெட்டிமுடியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள பூதக்குழி என்ற பகுதியில் ஆற்றிலிருந்து 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. அந்தச் சிறுமிகள் மயில்சாமி என்பவரின் மகள் சிவரஞ்சனி (15) மற்றும் பன்னீா்செல்வம் மகள் கெளசிகா (15) என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 65 ஆக உயா்ந்துள்ளது. எஞ்சிய 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வன விலங்குகள் நடமாட்டம்

பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மழை வெள்ளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வரும் பூதக்குழி பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால், அப்பகுதியில் வனத் துறையினா் மற்றும் பழங்குடியினரின் கண்காணிப்புடன் குறைந்த எண்ணிக்கையில் மீட்புப் படையினா் தேடும் பணியை தொடர திட்டமிட்டுள்ளதாக, மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT