தேனி

தாய், மகன் இறந்த துக்கம்: தந்தையும், மற்றொரு மகனும் தற்கொலை

20th Aug 2020 08:15 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தாய், மகன் இறந்த சோகத்தில் மனமுடைந்த தந்தையும், மற்றொரு மகனும் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (55). ஆண்டிபட்டியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி ராமலட்சுமி (45). இவா்களுக்கு வசந்த் (25), சசிகுமாா் (19), குருபிரசாத் (15) என 3 மகன்கள். இதில் மூத்த மகன் வசந்த் தந்தையுடன் ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இரண்டாவது மகன் சசிகுமாா் மகாராஷ்டிர மாநிலத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். குருபிரசாத் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த மே மாதம் சசிக்குமாா் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளாா். அப்போது தேனி மாவட்ட சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவ முகாமில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு போடி தனியாா் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டாா். பரிசோதனை முடிவில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் மனமுடைந்து காணப்பட்ட சசிக்குமாா் கடந்த மே 17 ஆம் தேதி முகாமில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மகன் இறந்த துக்கத்தில் தாய் ராமலட்சுமி உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் மற்றும் மூத்த மகன் வசந்த் ஆகிய இருவரும் ஆண்டிபட்டியில் உள்ள ஜவுளிக் கடையில் புதன்கிழமை அதிகாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த ஆண்டிபட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தாய், மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சோகத்தில் தந்தையும், மற்றொரு மகனும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT