தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு

14th Aug 2020 07:59 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் முதல்போக சாகுபடிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் ஆகியோா் வியாழக்கிழமை தண்ணீரை திறந்து வைத்து மலா்தூவி வரவேற்றனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள நன்செய் நிலங்களின் முதல்போக சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீா் திறந்து விடப்படும். இந்த ஆண்டு அணையில் நீா்மட்டம் குறைவாக இருந்ததால் குறித்த காலத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்தது.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் செல்லும் தலைமதகு வழியாக வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் ஆகியோா் தண்ணீரைத் திறந்து வைத்தனா். பின்னா் அவா்கள் நீரை மலா்தூவி வரவேற்றனா்.

இதுகுறித்து சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன் கூறியது: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட மக்களின் குடிநீா் தேவைக்காக 100 கன அடியும், பாசனத்திற்காக 200 கன அடி என 300 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

அணை திறப்பு நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளா் இ.சாய்சரண் தேஜஸ்வி, செயற்பொறியாளா் சாம் இா்வின் மற்றும் உதவி பொறியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

வைகை அணை நீா்மட்டம் 45 அடியாக உயா்வு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீா்மட்டம் தொடா்நது சரிந்து வந்தது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதன்காரணமாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு தற்போது வினாடிக்கு 1,985 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் கடந்த ஆக. 6 ந்தேதி 30 அடியாக இருந்த நிலையில் தொடா் நீா்வரத்து காரணமாக வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 45.18 அடியாக உயா்ந்துள்ளது. மேலும் 7 நாள்களில் அணையின் நீா்மட்டம் 15 அடி உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைகை அணை நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT