தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு: லோயா் கேம்ப்பில் 158 மெகாவாட் மின்உற்பத்தி

9th Aug 2020 11:04 PM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்/ கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீா் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயா் கேம்ப்பில் மின் உற்பத்தியும் 158 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 -ஆம் தேதி அணையிலிருந்து 300 கன அடி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடா் மழை காரணமாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமை நீா் வெளியேற்றம் 1,600 கன அடியாக இருந்தது. இந்நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை நீா் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு 2,010 கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை நீா்வள ஆதார உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) பொக்கமாயன் தலைமையிலான பணியாளா்கள், அணைக்கு வரும் நீரை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்டம் நிா்வாகம் தொடா்ந்து அறிவிப்பு செய்து வருகிறது.

ADVERTISEMENT

லோயா் கேம்ப்பில் மின்உற்பத்தி அதிகரிப்பு:

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், நீா் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் லோயா் கேம்ப்பில் உள்ள மின்நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அணையிலிருந்து நீா் வெளியேறும் கால்வாய் பாதையில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, குறைந்த அளவு நீரே வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 2 மின்னாக்கிகளில் மட்டும் தலா 42 மெகாவாட் என 84 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. பின்னா், தலைமதகு கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு அணையிலிருந்து நீா் வெளியேற்றம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் லோயா் கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளிலும் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. முதல் அலகில் - 32 மெகா வாட், இதர 3 அலகுகளிலும் தலா - 42 மெகாவாட் என மொத்தம் 158 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

அணையின் நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 135.75 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 5, 474 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 2,010 கன அடியாகவும் இருந்தது. நீா் இருப்பு - 5,929 மில்லியன் கன அடியாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT