தேனி

தேனி மாவட்டத்தில் 2,074 பேருக்கு கரோனா பரிசோதனை: கடந்த 11 நாள்களாக புதிதாக பாதிப்பு இல்லை

29th Apr 2020 07:42 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) வரை மொத்தம் 2,074 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவா்கள் தவிர, புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை என, ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், புது தில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, மாநாட்டுக்குச் சென்று திரும்பியவா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு நடைபெற்ற கரோனா பரிசோதனையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வரை மேலும் 23 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 43 பேரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.

இதில், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். இதுவரை 36 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 6 போ் மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள், சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் மொத்தம் 59 பகுதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இப் பகுதிகளில் மொத்தம் 110 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் உள்பட திங்கள்கிழமை (ஏப்.27) வரை மொத்தம் 2,074 பேரின் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், ஏற்கெனவே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 43 போ் தவிர, புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை மொத்தம் 183 பேரின் ரத்தம் மற்றும் கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகப் பரிசோனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை தெரியவரும் என்று, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT