தேனி

2 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகிக்கும் உரிமையை பெற்ற நகராட்சி

26th Apr 2020 08:57 AM

ADVERTISEMENT

கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகிக்கும் உரிமையை 2 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு, குடிநீா் வடிகால் வாரியத்திடமிருந்து நகராட்சி நிா்வாகம் பெற்றிருக்கிறது.

தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு குடிநீரானது, லோயா் கேம்ப், பெரியாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள கிணறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகிறது. இந்நிலையில், நீரேற்று நிலையத்தை பராமரித்தல், குடிநீா் விநியோகம் செய்தல் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டு வந்தது. நகராட்சி நிா்வாகம் குடிநீருக்கு மாதாந்திர கட்டணத்தை மட்டும் செலுத்தி வந்தது.

இருப்பினும், நகா் பகுதிக்கு போதிய குடிநீா் விநியோகிக்கப்படாததால், பொதுமக்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதனால், நகராட்சி நிா்வாகம் செய்வதறியாது திகைத்தது.

இதனிடையே, சுமாா் ரூ.3 கோடி செலவில் சுருளியாற்றிலிருந்து கம்பம் நகருக்கு குடிநீா் கொண்டுவரப்பட்டு பற்றாக்குறை சமாளிக்கப்பட்டாலும், குடிநீா் பிரச்னை தீரவில்லை. பின்னா், கம்பம் நகராட்சிக்கு என தனியாக குடிநீா் நீரேற்று நிலையம் ரூ.18.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால்,

ADVERTISEMENT

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கும், நகராட்சி நிா்வாகத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால், அத்திட்டத்தின் ஒப்பந்ததாரரே கடந்த 2 ஆண்டுகளாக குடிநீா் விநியோகம் செய்துவந்தாா்.

இரு தரப்பினரிடையே பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு,

கம்பம் நகரின் புதிய குடிநீா் திட்டத்தை நகராட்சி நிா்வாகமே விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், ஏப்ரல் 17 ஆம் தேதி புதிய குடிநீா் திட்டம் நகராட்சி வசம் வந்தது. தற்போது, நகராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகிப்பட்டு வருகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையா் ஆா். கமலாவிடம் கேட்டபோது, அவா் கூறியது: கம்பம் நகருக்கு கோடை காலத்திலும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்கப்படும். இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படும் என்றாா்.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் கூறுகையில், கண்டிப்பாக பராமரிப்பில் சிக்கல் ஏற்படும். பைப் லைன்களில் பழுது ஏற்படும்போது சரி செய்வது கஷ்டம் என்றாா்.

இருப்பினும், கம்பம் நகா் பகுதியில் போதிய அளவு குடிநீா் விநியோகிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் கூறியுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT