தேனி

மலைக் கிராமங்களுக்கு குதிரைகளில் நிவாரணப் பொருள்கள்

20th Apr 2020 11:41 PM

ADVERTISEMENT

தமிழக மலை கிராமங்களுக்கு கேரள மாநிலம் வழியாக நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல அம்மாநில போலீஸாா் அனுமதி மறுத்ததால், குதிரைகள் மூலம் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள டாப்ஸ்டேசன், கொழுக்குமலை, சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகிய மலை கிராமங்களுக்கு நேரடியாக போக்குவரத்து வசதி இல்லாததால் கேரள மாநில சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்திலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கேரளத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தமிழக அதிகாரிகள் நிவாரணப் பொருள்களை, இரண்டு வாகனங்களில் கேரள மாநிலம் வழியாக, தமிழக மலை கிராமங்களுக்கு கொண்டு செல்ல முயன்றனா். போடிமெட்டு மலை கிராமத்தில் கேரள எல்லையில் பணியில் இருந்த அம்மாநில போலீஸாா் தமிழக அரசின் நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்து விட்டனா். போடி வட்டாட்சியா் மணிமாறன், வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் கேரள போலீஸாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் தமிழக அரசின் நிவாரண பொருள்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்துவிட்டனா். இதனால் தமிழக அதிகாரிகள் நிவாரணப் பொருள்களை திருப்பி கொண்டு வந்து விட்டனா்.

இதனையடுத்து தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் குரங்கணி மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 10 குதிரைகள் மூலம் மலைப் பாதை வழியாக டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ADVERTISEMENT

இதுகுறித்து குரங்கணி மலை கிராம மக்கள் கூறியது: கேரளத்துக்கு செல்லும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் வாகனங்களை அம்மாநில போலீஸாா் அனுமதித்து வருகின்றனா். இந்நிலையில், தமிழக அரசின் நிவாரண பொருள்கள் ஏற்றிச் சென்ற அரசு வாகனங்களையே திருப்பி அனுப்பியது அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT