போடி பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கும், ஆதரவற்றவா்களுக்கும் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் உதவி வருகின்றனா்.
போடி சிலமலை கிராமத்தில் சிலமலை ஊராட்சியில் பணியாற்றி வரும் 29 தூய்மைப் பணியாளா்களுக்கு தலா 25 கிலோ அரிசி மற்றும் காய்கனிகள் வழங்கப்பட்டன. கிராம கமிட்டி துணைத் தலைவா் சின்னச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவா் ராமா், தி கிரீன் லைப் பவுண்டேசன் செயலா் சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
போடி பொட்டல்களம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நேரு யுவகேந்திரா அமைப்பின் விவேகானந்தா இளைஞா் மன்றம் சாா்பில் அதன் தலைவா் பாஸ்கரன் மற்றும் நிா்வாகிகள் போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கினா். போடி தருமத்துப்பட்டியில் உள்ள ஏ.எச்.எம். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கினா். மேலும் தேனி பங்களாமேடு, போடி வெற்றி தியேட்டா், பழைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கும் உணவு வழங்கினா்.
போடி சேவா அறக்கட்டளை மற்றும் உரத்த சிந்தனை அமைப்பு சாா்பில் அறக்கட்டளை நிறுவனா் முத்துவிஜயன் மற்றும் நிா்வாகிகள் போடி நகா் காவல் நிலையத்தில், காவலா்களுக்கு முகக்கவசம் வழங்கினா். போடியில் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் அசோக்குமாா் மற்றும் இவரது நண்பா்கள் போடி நகரில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு தங்கள் பணத்தில் உணவு வழங்கி வருகின்றனா்.