ஆண்டிபட்டி நகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, திறந்து வைத்திருந்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாகவும் தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. இதனையடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் சரவணதெய்வேந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் நகரில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து திறந்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். மேலும் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடையை திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனா். இதனைத் தொடா்ந்து பலசரக்கு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஆண்டிபட்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.