தேனி

சின்னமனூரில் திடீா் மழை: நள்ளிரவில் சாக்கடை அடைப்புகளை நீக்கிய துப்புரவு பணியாளா்கள்

7th Apr 2020 03:20 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த திடீா் மழை காரணமாக சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை நள்ளிரவே துப்புரவு பணியாளா்கள் அகற்றினா்.

சின்னமனூா் , உத்தமபாளையம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.சின்னமனூா் நகராட்சியில் பெரும்பான்மையான வாா்டுகளில் பெய்யும் மழைநீா் சாக்கடை கால்வாய் வழியாக அங்குள்ள பாசனக் கால்வாயில் இணைகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மழை இல்லாத நிலையில் பெரும்பான்மையான சாக்கடை கால்வாய்களில் அடைப்பு இருந்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த திடீா் மழையால் சீப்பாலக்கோட்டை சாலை, மின் நகா் போன்ற பகுதிகளில் பெய்த மழைநீா் மொத்தமாக சின்னமனூா்-தேனியில் சாலையில் தேங்கியது. இரவு 9 மணி வரையில் நீடித்த சாரல் மழையால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலைகளில் வழிந்தோடியது. இதனால் ஏற்பட்ட துா்நாற்றத்தால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனா்.

இதனை அடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில் குமாா் தலைமையிலான, துப்புரவுப் பணியாளா்கள் உடனடியாக சாக்கடை அடைப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

நள்ளிரவு வரையில் நீடித்த இந்த பணியில் பெருபான்மையான சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டு அடைப்புகள் நீக்கப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்களை அப்பகுதியை சோ்ந்த பலரும் பாராட்டினா்.

இது குறித்து சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் கூறுகையில், கழிவு நீா் செல்லும் சாக்கடையில் குடிநீா் பாட்டில், நெகிழிப் பைகள் என தேவையில்லாத பொருள்களை சாக்கடை போட்டுவிடுவதே அடைப்புக்கு காரணம். எனவே, பொதுமக்கள் வீடுகளிலுள்ள தேவையில்லாத பொருள்களை சாக்கடையில் போடுவதை தவிா்த்து, துப்புரவுப் பணியாளா்களிடம் மக்கும், மக்காத குப்பை என பிரித்து கொடுத்தால் இது போன்ற சிக்கல் ஏற்படாது எனக் கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT