தேனி

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

22nd Sep 2019 12:40 AM

ADVERTISEMENT


தேனி அருகே பூதிப்புரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 7 வயது மகள், மனநலம் குன்றிய மற்றும் வாய்பேச முடியாத சிறுமி. 
இவர், கடந்த 3 ஆண்டுகளாக தேனி அருகே அரண்மனைப்புதூரில் வானவில் என்ற பெயரில் செயல்பட்டு வரும் மன நல காப்பகத்திற்குச் சென்று திறன் பயிற்சி பெற்று வருகிறார். 
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி வழக்கம் போல மன நல காப்பகத்திற்கு ஆட்டோவில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அடையாளமாக காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது பெற்றோர், உறவினர்கள், பூதிப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் பேரவை, ஜனநாயக மாதர் சங்கம், பெண்கள் விடுதலை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோரிக்கை குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்குமாரிடம் மனு அளித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT