தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி, இந்திரா காலனிக்கு சாலை வசதி கோரி சனிக்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் அரசு சார்பில் இலவச வீட்டுமனையிடம் வழங்கப்பட்ட இந்திரா காலனிக்கு சென்று வருவதற்கு தனியாருக்குச் சொந்தமான இடத்தை பொதுமக்கள் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன் இட உரிமையாளர் இந்தப் பாதையை மறித்து சுவர் அமைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திரா காலனிக்குச் சென்று வர சாலை வசதி கோரி அப் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த செப். 16-ஆம் தேதி முதல், குடியிருப்புகளை விட்டு வெளியேறி தனியார் புளியந்தோப்பில் கூடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திரா காலனிக்குச் சென்று வர மாற்றுத் பாதை உருவாக்கித் தருவதாக வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியதை பொதுமக்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், இந்திரா காலனிக்குச் சென்று வர சாலை வசதி செய்து தரக் கோரி, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதை அருகே சனிக்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் நாகரத்தினம், தேனி மக்களவை தொகுதி செயலர் இரா.தமிழ்வாணன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.