தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜவுளிக் கடையில் துணிகள் திருடிய 2 பெண்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை வைத்திருப்பவர் சரஸ்வதி (60). இவரது கடைக்கு கடந்த ஜூலை 26 ஆம் தேதி துணி வாங்க 3 பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஜவுளி துணிகளை திருடி சென்றனர். அவர்கள் சென்ற பின்பு துணிகள் குறைந்திருப்பது கண்டு சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது 3 பேரும் துணிகளை திருடி இருப்பது பதிவாகி இருந்தது.
இது குறித்து சரஸ்வதி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வி (36) என்பவரை ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி, அங்குத்தாய் ஆகியோரை ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணதெய்வேந்திரன் தலைமையிலான சார்பு -ஆய்வாளர் கோதண்டராமன், சிறப்பு சார்பு -ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.