தேனி

தனியார் இ-சேவை மையங்களில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

13th Sep 2019 08:37 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தனியார் இ-சேவை மையங்கள் அதிக  கட்டணம் வசூலிப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
        மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மின்னணு குடும்ப அட்டை உதவியாக இருக்கும் என்பதால், பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையை தமிழக அரசு முறைப்படுத்தி வருகிறது. குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அரசு இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அனுமதிபெற்ற தனியார் இ-சேவை மையங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் திருத்திக்கொள்ளலாம் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.
      அதனடிப்படையில், பயனாளிகள் புகைப்படம், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பத்திலுள்ள தகவல்களை இணைக்கவேண்டும்.  குறைந்தபட்சமாக, ரூ.20 முதல் ரூ.60 கட்டணம் வசூலிக்க வேண்டும்.
     ஆனால், இடைத்தரகர்களின் தலையீட்டால் 100 முதல் 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிப்பதாககவும் புகார் எழுந்துள்ளது.
     எனவே, மாவட்ட நிர்வாகம் சேவை மையங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT