தேனி

சின்னமனூர் பேருந்து நிலையம் முன்பாக நிறுத்தப்படும்  தனியார் வாகனங்களை அகற்றக் கோரிக்கை

13th Sep 2019 08:38 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சின்னமனூர் நேருஜி பேருந்து நிலையத்துக்குள் அரசுப் பேருந்துகள் செல்லமுடியாத வகையில் தனியார் வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவாதாக, ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
      சின்னமனூர் நகராட்சிக்குச் சொந்தமான நேருஜி பேருந்து நிலையம் சிதிலமடைந்து பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி முடங்கிக் கிடந்தது. இதனால், பேருந்துகள் சாலையிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
       இந்நிலையில், நேருஜி பேருந்து நிலையத்தை சீரமைத்து,  நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தையும் ஒரே இடத்தில்  நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க திட்டமிடப்பட்டது. இதற்கு,  தமிழக அரசு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதில், 48 வணிக வளாகங்களுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.      இந்நிலையில், நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்து வெளியேறும் வகையிலான இரு வாயில்களின் முன்பாகவும், தனியார் ஆட்டோ, சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல், மீண்டும் சாலையிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் நிலையத்துக்குள் வராததால், பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
     இது குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறியது:  பேருந்து நிலையத்துக்குள் தற்போது நகரப் பேருந்துகள் மட்டுமே சென்று வருகின்றன. தற்போது, பேருந்து நிலையத்தின் முன்புறம் தனியார் வாகனங்கள் நிறுத்தும்  இடமாக மாறிவிட்டது. இதனால், பெரும்பான்மையான பேருந்துகள் நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. 
     எனவே, நகராட்சி நிர்வாகம், காவல் துறையினர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT