தேனி

வைகை அணை நீர்த்தேக்கத்தில் ஆகாயத் தாமரை: குடிநீர் மாசுபடும் அபாயம்

7th Sep 2019 02:42 AM

ADVERTISEMENT

வைகை அணை முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் காணப்படுவதால், குடிநீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மதுரை மாநகருக்கும், சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், தற்போது பெய்துவரும் தொடர் மழையால் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 25 அடிக்கும் கீழே இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 54 அடியை எட்டியுள்ளது. 
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் அதேநேரத்தில், அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்குள் ஆகாயத் தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. அணையின் முன்பகுதியில் குடிநீருக்காக திறக்கப்பட்டு, தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரிலும் அதிகளவு ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
பொதுவாக, வைகை அணையின் முன்புறமுள்ள பிக்கப் டேம் பகுதியில்தான் அதிகளவில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து காணப்படும். ஆனால், தற்போது அணையின் பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளுக்குள் அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால், தண்ணீர் முழுவதும் மாசடையும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆகாயத் தாமரை செடிகள் அதிக வளர்ச்சியுடன் வேகமாக படரும் தன்மைகொண்டவை. எனவே, வைகை அணை நீர்த்தேக்கத்துக்குள் ஆகாயத் தாமரை முழுவதுமாக படர்வதற்கு முன்பாக இவற்றை முழுதும் அப்புறப்படுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT