தேனி

வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல்அனுமதி: புதிய வழிமுறைகளை உருவாக்க எதிர்ப்பு

7th Sep 2019 02:40 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட வனப் பகுதிகளில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்கும் விவகாரத்தில் அதிகாரிகள் புதிய வழிமுறைகளை உருவாக்குவதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாடு வளர்ப்போர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளில் வனத் துறை சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில்,  கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வனத் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 25 ஆயிரம் மலை மாடுகள் உள்ள நிலையில், வனத் துறை சார்பில் 6,000 மாடுகளுக்கு மட்டுமே வனப் பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வனத் துறையின் நெருக்கடியால் நாட்டு மாடு இனம் அழிந்து வருவதாகவும், தோட்டக் கலைப் பயிர்களுக்கு தொழு உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும், மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் மலை மாடுகள் வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் விவகாரம் குறித்து ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில், மலை மாடுகள் வளர்ப்போருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், மேகமலை வன உயிரினக் காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மேய்ச்சல் தரிசு  நிலங்களில் தீவனப் புல் வளர்ப்பது, மலை மாடுகளுக்கு காப்பீடு செய்வது என்ற அதிகாரிகளின் ஆலோசனைகளை மலைமாடுகள் வளர்ப்போர் ஏற்க மறுத்தனர். மேலும், புதிய வழிமுறைகளை உருவாக்காமல் வழக்கத்தில் உள்ள நடைமுறை மற்றும் வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 
பின்னர், மலை மாடுகள் வளர்ப்போர் சங்கங்கள், மலை மாடுகள் மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வனத் துறையினரிடம் சமர்ப்பிப்பது, மலை மாடுகள் வளர்க்கப்படும் பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT