தேனி

தமிழகத்திலிருந்து செல்லும் பாலில் கலப்படப் புகார்: கேரள தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

7th Sep 2019 02:41 AM

ADVERTISEMENT

தமிழகத்திலிருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு சென்ற பாலை,  குமுளியில் கேரள மாநில பால்வளத்துறை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தேனி மாவட்டம்  குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு ஆகிய 3 மலைச்சாலைகள் வழியாக,  நாள்தோறும் டேங்கர் லாரிகள் மூலம் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது.  இந்நிலையில் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் பாலில் கலப்படம் உள்ளதாக கேரள மாநில பால் வளத்துறையினருக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து வியாழக்கிழமை (செப். 5) தமிழக கேரள எல்லை சந்திப்பில், குமுளியில் இடுக்கி மாவட்ட பால்வளத்துறை சார்பில்  தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் தொடங்கப்பட்டது. ஆய்வகம் தொடங்கப்பட்ட வியாழக்கிழமை ஒரு டேங்கர் பால் லாரி கூட தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லவில்லை.
பின்னர் வெள்ளிக்கிழமை  (செப்.6) பால் ஏற்றி வந்த டேங்கர் லாரிகளை,  கேரள மாநில அதிகாரிகள் இரு மாநில எல்லையான குமுளியிலேயே தடுத்து நிறுத்தி, பால் மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர்.
இதுபற்றி  இடுக்கி மாவட்ட பால் வளத்துறை இணை இயக்குநர் ஜிஜா கூறியது: வரும் செப்டம்பர் 11 இல், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு குமுளியில் கேரள சுங்கத்துறை சோதனைச்சாவடியில், இடுக்கி மாவட்ட பால்வளத்துறை மற்றும் பால் தரக்கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் சிறப்பு ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குள் கொண்டு செல்லப்படும் பால், பல நாட்களுக்கு கெடாமல் இருக்க "ஃபார்மோலின்" என்ற வேதிப்பொருள்கள் கலக்கப்படுவதாக புகார்கள் வந்தன. 
அதன்பேரில் பால் மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதில் வேதிப்பொருள், கலக்காத பால் மட்டுமே கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும். கலப்பட பால் திருப்பி அனுப்பப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT