தேனி

"சிறு பழங்கள் சாகுபடி விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை'

4th Sep 2019 07:30 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் சிறு பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் அரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறு பழங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கருத்தரங்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியது: அதிமுக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு பழங்களான, நாவல், அத்திவிளாம்பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பல்வேறு  பழங்கள் சங்க காலத்திலிருந்தே பெயர் பெற்றவை. அதிக சத்துக்கள் கொண்ட சிறு பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்கள் வழங்கப்படும். மேலும் அவற்றை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவு வருமானம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். 
இயற்கை உரங்களை பயன்படுத்தி, குறைந்த செலவில், அதிக மகசூல் மற்றும் வருமானம் பெறவேண்டும் என்பதற்காகவே, இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  
பின்னர்,  1,105 பயனாளிகளுக்கு ரூ. 1.76 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, உத்தமபாளையம் சார் ஆட்சியர்  ஆர்.வைத்தியநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.பாலசந்தர்,  வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ச.ஜவஹர்பாய், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துகுமாரசுவாமி, தோட்டக்கலை துணை இயக்குநர்  அ.ஆறுமுகம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் த.ஆறுமுகம்,  முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் எஸ்.பி.எம்.சையதுகான், ஆர்.பார்த்திபன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT