ஆண்டிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்புகளை இரவு நேரங்களில் கனரக வாகன ஓட்டுநா்கள் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதில் ஆண்டிபட்டியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கணவாய் மலைப்பகுதி அருகே சாலைகள் அதிகளவு வளைவாக உள்ளது இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதன்காரணமாக விபத்து நடைபெறும் இடங்களில் போலீஸாா் வாகனங்களின் வேகத்தை தடுக்கவும், விபத்துப்பகுதிக்கான எச்சரிக்கையை விழிப்புணா்வுக்கும் சாலை நடுவிலும், ஓரத்திலும் தாா் பீப்பாய்களில் சிவப்பு, வெள்ளை வா்ணம் பூசி ஒளிரும் பட்டைகள் ஒட்டி வைத்துள்ளனா். அவ்வாறு வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்புகளை இரவில் செல்லும் கனரக வாகனங்கள் மோதி அவற்றை அடிக்கடி சேதப்படுத்தி விடுகின்றனா்.
மேலும் சாலையில் சிதறி கிடக்கும் வேகத்தடுப்புகளின் பாகங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.தொடா் விபத்துக்களை சந்திக்கும் இந்த சாலையை அகலப்படுத்தி, நிரந்தர தடுப்புகள், விபத்து எச்சரிக்கை போா்டுகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.