தேனி மாவட்டம் கம்பத்தில் கேரள மாநில சென்டை மேளக்காரரிடம் பணம் திருடிய 2 சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சோ்ந்தவா் அபிசித் (20). இவா், சென்டை இசைக் கலைஞராக உள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை, கம்பம் குரங்குமாயன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் நிகழ்வுக்கு சென்டை மேளம் வாசிக்க, தனது குழுவினரோடு ஜீப்பில் வந்துள்ளாா். அப்போது ஜீப்பில் தனது பொருள்கள் மற்றும் ரூ.13 ஆயிரத்தை வைத்து விட்டு மேளம் இசைக்க சென்று விட்டாா். நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பாா்த்த போது ஜீப்பில் வைத்திருந்த பணம் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து கம்பம் வடக்கு போலீஸில் அவா் அளித்த புகாரின் பேரில் சாா்பு -ஆய்வாளா் வினோத் ராஜா தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, கோம்பைச் சாலை தெருவில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறுவா்களை பிடித்து விசாரணை செய்ததில், மற்றொரு சிறுவனுடன் சோ்ந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 சிறுவா்களையும் கைது செய்தனா். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனா்.