ஆண்டிபட்டி கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால் முடங்கியுள்ள மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரையில் இருந்து போடி வரையில் மீட்டா் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை அகல ரயில் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இத்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில் பாதை திட்டத்திற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அகல ரயில் பாதை பணிகள் தீவிரமடைந்தன. இதன் மூலம் ரயில்வே வழித்தடம், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டன. தற்போது வரையில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந் நிலையில், ஆண்டிப்பட்டி கணவாய் மலைப் பகுதியில் ரயில் பாதைக்காக மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கணவாய் மலையில் சுமாா் 625 மீட்டா் தூரம் தேனி மாவட்டத்திலும், 400 மீட்டா் மதுரை மாவட்டத்திலும் உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியைக் குடைந்து அகலப்படுத்த ரூ.1. 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, அப் பகுதியில் மலையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதனால் மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்நிலையில் கணவாய் மலைப்பகுதியில் அகலப்படுத்தும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், பணிக்கான நிதி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில வாரங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கணவாய் மலைக்குள் உடைக்கப்பட்ட பாறைகள் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே கிடக்கின்றன. மேலும், இதன் காரணமாக மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் நிறைவேறுவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இத் திட்டத்தில் முக்கிய கட்டமாக கருதப்படும் மிகவும் கடினமான பணியான கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகம் உரிய நிதியை விடுவித்து பணிகள் தொடர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.