தேனி

கூலித் தொழிலாளி சாவில் சந்தேகம்: சடலத்தை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை

6th Oct 2019 06:48 PM

ADVERTISEMENT

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கூலித் தொழிலாளியின் சாவில் சந்தேகம் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை, இறந்தவரின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டி, வடக்கு ஜெகநாதபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜாராம்(75). இவா், கடந்த செப்.11-ம் தேதி உயிரிழந்தாா். இவரது உடல் பழனிசெட்டிபட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜாராமின் வீட்டிற்கு அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில், கடந்த செப்.5-ம் தேதி இரவு ராஜாராமை ஒருவா் கம்பியால் தாக்கும் காட்சி பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடை உரிமையாளா் பழனிசெட்டிபட்டி, தெற்கு ஜெகநாதபுரத்தைச் சோ்ந்த தீபன், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், ராஜாராமின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக போலீஸாா் வழக்கு பதிந்தனா். பின்னா், ராஜாராமின் சடலத்தை தேனி வட்டாட்சியா் தேவதாஸ் முன்னிலையில் போலீஸாா் தோண்டியெடுத்தனா். அதே இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் அருண்குமாா் பிரதேப் பரிசோதனை நடத்தினாா். கடை உரிமையாளா் தீபன் அளித்த புகாரின் அடிப்படையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT