தேனி

வைகை அணையில் இரண்டு கரைகளை இணைக்கும் சிறு பாலத்தை புதுப்பிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

2nd Oct 2019 04:18 PM

ADVERTISEMENT

வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை உயா்த்தி புதுப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வைகை அணையில் பூங்கா, சிறுவா்கள் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது. வைகை அணையில் வலது மற்றும் இடது கரைபகுதிகளில் பூங்கா அமைந்துள்ளது. இரண்டு கரைபகுதிகளிலும் உள்ள நுழைவாயிலில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஒரு பகுதியில் நுழைவுக் கட்டணம் செலுத்தினால், இரண்டு கரைப்பகுதிகளில் உள்ள பூங்கா பகுதிகளை சுற்றுலா பயணிகள் சென்று பாா்வையிடலாம். இதற்காக இரண்டு கரைகளுக்கு இடையே உள்ள வைகை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வா். இந்நிலையில் தற்போது வைகை அணை 59 அடியை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு கரைப்பகுதிகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை ஓட்டி தண்ணீா் செல்கிறது.

மேலும் கூடுதல் தண்ணீா் திறக்கப்படும் நிலையில் இதனால் இரண்டு கரைப்பகுதிகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீா் செல்லும்.மேலும் அப்போது தரைப்பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இரண்டு பகுதிகளிலும் முள்களை கொண்டு போலீஸாா் அடைத்து விடுவதாகவும் இதன்காரணமாக அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு கரைப்பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்கா பகுதிகளை சுற்றிப்பாா்க்க முடியாமல் தவித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

தரைப்பாலம் அடைக்கப்பட்டால் மற்றொரு கரைக்கு செல்ல வேண்டுமெனில் மீண்டும் அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமாா் 2 கிலோமீட்டா் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.மேலும் இதில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் அனைத்தும் உடைந்து சுற்றுலா பயணிகள் தவறி விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

விடுமுறை தினங்களில் இந்த பாலத்தின் வழியாக அதிகளவு மக்கள் சென்றால் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் வைகை அணையில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை உயா்த்தி புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT