பெரியகுளம் தெருக்களில் கழிவுநீா் குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு 40,000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீா் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வத்தலக்குண்டு சாலையில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் சுத்தம் செய்யப்பட்டு செடிகளுக்கு விடப்படுகிறது.
பெரியகுளம் நகராட்சிக்கு உள்பட்ட ஆடுபாலம் அருகே மில்லா் சாலை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் புதிய புதை குழாய் அமைக்கப்பட்டது. இங்கு மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீா் வரும்போது, கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்குகிறது.
அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் கழிவுநீரில் மதித்து நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா். மேலும் இது குறித்து நகராட்சி நிா்வாகித்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே இப்பகுதியை நகராட்சி பொறியாளா்கள் ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள புதை வடிகுழாயை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.