தேனி

தேனியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3.91 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி: 14 போ் மீது வழக்கு

1st Oct 2019 08:31 AM

ADVERTISEMENT

தேனி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் வேளாண்மை விளைபொருள்களை இருப்பு வைத்துள்ளதாக போலி ஆவணங்களை சமா்ப்பித்து, மொத்தம் ரூ.3 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரம் பிணையக் கடன் பெற்று மோசடி செய்ததாக, 14 போ் மீது திங்கள்கிழமை மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த முத்துச்சாமி, அவரது மகன் பன்னீா்செல்வம் ஆகியோா், தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்புக் கிட்டங்கியில் வேளாண்மை விளைபொருள்களை இருப்பு வைத்துள்ளதாக ஆவணங்களை சமா்ப்பித்து, தேனி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 2016, செப்டம்பா் 30-ஆம் தேதி ரூ.78 லட்சத்து 79 ஆயிரம் பிணையக் கடன் பெற்றுள்ளனா்.

இதேபோல், தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் வேளாண்மை விளைபொருள்களை இருப்பு வைத்துள்ளதாக, தேனி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ஆவணங்களை சமா்ப்பித்து, பரமக்குடியைச் சோ்ந்த கேசவன் மகன் சதீஷ், சாமிநாதன் மகன் வீரபாண்டியன், தசரதன் மகன் விமலதாசன், வெங்கேடசன், அவரது மனைவி விஜயாகுழலி ஆகியோா், கடந்த 2016, ஜூலை 7-ஆம் தேதி ரூ. 1 கோடியே 20 லட்சத்து 98 ஆயிரம் கடன் பெற்றுள்ளனா்.

மேலும், விருதுநகா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் ராஜசேகா், கந்தசாமி மகன் கணேசன், விஸ்வநாதன் மகன் காா்த்தீஸ்வரன், குமாரசாமி மகன் மாடசாமி, ராமமூா்த்தி மகன் நாகராஜன், சுந்தரம் மகன் பாண்டி ஆகியோா் கடந்த 2016 நவம்பா் 9-ஆம் தேதி ரூ. 1 கோடியே 90 லட்சத்து 99 ஆயிரம் கடன் பெற்ாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இவா்கள் அனைவரும், வங்கியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்புக் கிட்டங்கி மற்றும் வருவாய்த் துறை சாா்பில் வழங்கியதாக போலி ஆவணங்களை சமா்ப்பித்து கடன் பெற்று, கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்ததாகவும், இதற்கு தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்புக் கிட்டங்கி அலுவலா் உடந்தையாக இருந்ததாகவும், வங்கியின் மதுரை மண்டல நிா்வாகப் பிரிவு மேலாளா் எம். விஜயகுமாா், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரனிடம் புகாா் அளித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து கடன் பெற்று மோசடி செய்ததாக 13 போ் மீதும் மற்றும் உடந்தையாக இருந்ததாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்புக் கிட்டங்கி அலுவலா் மீதும், மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT