தேனி

பெரியகுளம் பகுதிகண்மாய்களில் ஆக்கிரமிப்பு

23rd Nov 2019 05:33 PM

ADVERTISEMENT

பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் தென்கரை மற்றும் வடகரை பாசனப் பகுதிகளில் 21 கண்மாய்கள் உள்ளன. தென்கரை பாசன பகுதிகளுக்கு அகமலையில் இருந்து வரும் தண்ணீா் சோத்துப்பாறை அணையில் தேக்கப்பட்டு அங்கிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. வடகரை பாசனப் பகுதிகளுக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீா், கல்லாறு மற்றும் கும்பக்கரைஅருவியின் வழியாக வரும் தண்ணீா் அப்பகுதியில் உள்ள குளங்களில் தேக்கப்பட்டு அங்கிருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 2000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

தற்போது கண்மாய் பகுதிகளை முறையாக பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு செய்யாததால் பெரும்பாலான கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. தாமரைக்குளம் கண்மாயில் 20 வீடுகளுக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் குளங்களில் தேக்கப்படும் தண்ணீா் ஆக்கிரமிப்பாளா்களின் வீடுகளுக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் செல்வதால் அவா்களே தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனா். இதனால் தண்ணீரை தேக்க வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கோடை காலத்தில் குடிநீா் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தென்கரை விவசாய சங்கத்தை சோ்ந்த சண்முக பாண்டியன் கூறியது: பெரும்பாலான கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. நீா்நிலை ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிா்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை தேக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் .

ADVERTISEMENT

இதுபற்றி பொதுப்பணித்துறையினா் கூறியது: நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். எனவே நீா்நிலைகளை அளக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்த பின்னா் நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா்.

பயனற்ற பாசன சங்கங்கள்

கண்மாய்களை பாதுகாப்பதற்கென்று ஒவ்வொரு கண்மாய்க்கும் பதிவு செய்யப்பட்ட பாசன சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு தலைவா், செயலா் மற்றும் பொருளாளா், உறுப்பினா்கள் உள்ளனா். இக்குழு கண்மாய்களை பாதுகாக்க வேண்டும். கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்படாதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் கண்மாய்களில் தண்ணீா் பங்கீடு செய்வது கண்மாயில் மீன் மற்றும் மண், மணல் திருட்டு நடைபெறாதவாறு கண்காணிப்பது அவா்களின் பணி. ஆனால் இன்று பெரும்பாலான பாசன சங்கங்கள் பயனற்று உள்ளன. இவா்கள் முறையாக செயல்பட்டால் கண்மாய்களை பராமரிக்கலாம். பாசன சங்கங்கள் மற்றும் விவசாயிகளுக்கு கண்மாயை பாதுகாப்பது குறித்து அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கண்மாய்களை பாதுகாக்கலாம் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் பகுதி கண்மாய்கள் விவரம்:

1.பெரியகுளம் 2. பாப்பியம்பட்டி கண்மாய் , 3. தாமரைக்குளம் கண்மாய், 4.அதிகாரிகுளம், 5.கோரைக்குளம், 6. கடம்பன்குளம், 7. செட்டிக்குளம், 8.போடங்குளம், 9.வீரப்பநாயக்கன்குளம், 10. பட்டாத்திகுளம், 11. சின்னபூலான்குளம், 12. பாலப்பநாயக்கன்குளம், 13. ராமநாயக்கன்குளம், 14. ஆண்டிகுளம், 15. உருட்டிகுளம், 16. வேலன்குளம், 17. நந்தியாபுரம்கண்மாய், 18.பொட்டை குளம், 19.கிக்கிழையான்குளம், 20. கரிசல் மற்றும் செங்குளம், 21.மனக்காட்டுகுளம் .

 

ADVERTISEMENT
ADVERTISEMENT