தேனி மாவட்டம் கம்பம் வட்டார விவசாயிகளுக்கு பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் சொட்டு நீா் அமைக்க ரூ.90 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வி.எஸ்.சங்கா்தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கம்பம் வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு புதிய மின்னாக்கி அமைக்க மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுண்ணீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு பாசன மேலாண்மை உறு துணை திட்டத்தின் கீழ் தரைமட்டத் தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம், ஆழ்துளைக் கிணறு அமைத்திட ரூ. 25 ஆயிரம், புதிய மின்னாக்கி இயந்திரம் அல்லது ஆயில் இயந்திரம் வாங்க ரூ.15 ஆயிரமும், நெகிழி குழாய்கள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. கம்பம் வட்டார விவசாயிகள் இந்த மானிய திட்டத்தை பயன்படுத்ததிக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.