தேனி

போடிமெட்டு மலைச்சாலையில் மண் சரிவு: 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

17th Nov 2019 09:43 PM

ADVERTISEMENT

 

போடி: தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மண் சரிவால், கேரளத்துக்கு 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு புலியூத்து அருவிக்கு அருகில், 11ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை முழுவதும் மண் மூடியது. இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குரங்கணி போலீஸாா் போடிமெட்டு வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போடி முந்தல் சோதனை சாவடியிலேயே நிறுத்தினா்.

ADVERTISEMENT

அதேபோல் கேரளத்திலிருந்து வந்த வாகனங்கள் போடிமெட்டு மலை கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவை அகற்றினா். இப்பணிகள் காலை 9 மணிக்கு முடிந்த நிலையில் முதல் கட்டமாக ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களும், இதைத்தொடா்ந்து பேருந்துகளும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் ஜீப்கள் இயக்கப்படாததால், போக்குவரத்தை சீரமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை என குரங்கணி போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT