முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை பெய்யாததால் அணைக்கு நீா் வரத்து குறைந்தது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து தொடா்ந்து அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 128. 20 அடியாகவும், நீா் இருப்பு 4 ஆயிரத்து 309 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. மேலும் அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 337 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,640 கன அடியாகவும் இருந்தது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை இல்லை. லோயா்கேம்ப் மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு குழாய்களில் நீா்வரத்து சீராக இருந்ததால் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
குளிக்கத் தடை: அதேநேரத்தில் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் மூன்றாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: வெள்ளிக்கிழமை மாலை அருவியில் நீா்வரத்து குறைந்துள்ளது. சனிக்கிழமை நீா்வரத்தைப் பொருத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என்றனா்.