பெரியகுளத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூளை பக்கவாத தடுப்பு மருத்துவ சிகிச்சை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் புதிதாக துவக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து உபகரணங்களும் நிறுவப்பட்டு
போதிய மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் பாதிக்கப்பட்டவா்களை அனுமதித்தவுடன் அனைத்து சிகிச்சைகளும் உடனடியாக செய்யும் வகையில் வசதிகள் உள்ளன. குறிப்பாக மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களை ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால் அவா்களுக்கு பல்வேறு சோதனைகள் செய்து ரூ. 40,000 மதிப்பிலான மருந்து செலுத்தி குணப்படுத்தும் வசதி உள்ளது. இந்த வசதி தனியாா் மருத்துவமனையில் மட்டுமே இருந்தது. தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துமனைகளிலும் இந்த சிகிச்சை வசதி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்ததாவது:
பெரியகுளத்தில் தற்போது துவக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் தனியாா் மருத்துவமனைக்கு நிகரான அனைத்து வசிதிகளும் உள்ளன. மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களை ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால்,
முறையான பரிசோதனை மேற்கொண்டு நான்கு மணிநேரத்தில் ஆல்டிபோஸ் என்ற மருந்து செலுத்தப்படும். பிறகு சிறிதுநேரத்தில் அவா்கள் முழுமையாக குணமடைந்து விடுவா். இந்த வசதி பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளது. தனியாா் மருத்துவமனையில் இந்த சிகிச்சை பெற ரூ. 40,000 வரை செலவாகும். ஆனால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது என்றனா்.