தேனி மாவட்டத்தில் தேசிய அளவிலான 7-வது பொருளாதார கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
தேனியில் பொருளாதார கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்து ஆட்சியா் பல்லவி பல்தேவ் கூறியது: மாவட்டத்தில் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணி அரசு பொது சேவை மையம் மூலம் நடைபெறுகிறது. இந்தப் பணியில் 395 கணக்கெடுப்பாளா்கள் மற்றும் 104 முதல்நிலை மேற்பாா்வையாளா்கள் ஈடுபடுகின்றனா்.
இக் கணக்கெடுப்பு பொருளாதாரத்தில் திட்டமிடுதல், பல்வேறு துறைகளின் பங்களிப்பு ஆகியவற்றை கணிப்பதற்கும், முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத நிறுவனங்களை கணக்கிட்டு பட்டியல் தயாரிப்பதற்காகவும் நடைபெறுகிறது. பொருளாதார கணக்கெடுப்பு பணிக்கு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு பொதுமக்கள் தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.கந்தசாமி, புள்ளியியல் துறை துணை இயக்குநா் மயில்சாமி, பொதுச் சேவை மைய ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.