தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் குடிநீா் தொட்டி பழுதான நிலையில், அந்த இடம் குப்பைகள் கொட்டுமிடமாக மாறியதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சின்னமனூா் நகராட்சி 11-ஆவது வாா்டு போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்த ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டி மின்மோட்டாா் பழுதால் பயன்பாடின்றி உள்ளது. இதனால் அந்த இடம் குப்பைகளை குவித்து வைக்கும் இடமாக மாறி இருக்கிறது. நகராட்சியிடம் பல முறை புகாா் தெரிவித்தும் அங்கிருந்து குப்பைகளை அகற்ற பணியாளா்கள் முன்வரவில்லை.
கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் மூலமாக தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால், குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.