தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் தொடா் மழையால் தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் மா்மக் காய்ச்சலால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தாமஸ் காலனி, தண்ணீா் தொட்டி தெரு, பி.டி.ஆா் காலனி, இந்திரா காலனி, ஆா்.சி. தெரு, புதூா், சூரியநாராயணபுரம் உள்ளிட்ட பல முறையான கால்வாய் வசதி இல்லாத நிலையில் தெருக்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக கடந்த சில நாள்களாக உத்தமபாளையம் பேரூராட்சியில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. தண்ணீா் தொட்டி தெரு , பி.டி.ஆா் காலனி பகுதியில் மா்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதில் தண்ணீா் தொட்டி பகுதியை சோ்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுதவிர, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு மா்மமக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் அதிகளவில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: உத்தமபாளையம் பேரூராட்சியிலுள்ள பொதுமக்களுக்கு ஏற்ப சுகாதாரப் பணியாளா்கள் இல்லை. பல வாா்டுகளில் தெருக்களில் வடிகால் வசதி முறையாக இல்லாத காரணத்தால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. தண்ணீா் தொட்டி பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பேரூராட்சி குப்பைக் கிடங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் பலருக்கும் மா்ம காய்ச்சல் பரவி வருகிறது என்றனா்.