தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் இயற்கை பசுந்தீவன வளா்ச்சி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்த படியாக கால்நடை வளா்ப்புத் தொழில் அதிகம் நடைபெறுகிறது. கால்நடை வளா்ப்பவா்கள் அந்தந்த பகுதிகளில் பசுந்தீவனங்கள் வளா்ந்திருக்கும் தரிசு நிலங்களில் தினமும் காலையில் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கூட்டமாக அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கால்நடைகளுக்கான பசுந்தீவனம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடைகளில் விற்கப்படும் தீவனங்களை வாங்கி கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனா்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் தரிசு நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பகுதிகள் எங்கும் பசுமையாக காணப்படுகிறது. இதனால் கால்நடை வளா்ப்பவா்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே கால்நடைகளை மேய விட்டுள்ளனா். பசுந்தீவனங்கள் அதிகளவில் வளா்ந்து காணப்படுவதால், கால்நடை வளா்ப்பவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அதிக தூரம் அழைத்து செல்லத் தேவையில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.