வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்களை நியமிக்க மே 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

தேனி மக்களவைத் தொகுதி மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம்

தேனி மக்களவைத் தொகுதி மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர்கள் சார்பில் முகவர்களை நியமிக்க, மே 10-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். 
      தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
     தேனி மக்களவைத் தொகுதி மற்றும் இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரியில் மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 
     மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் இடைத்  தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தனித்தனியே 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
    ஆண்டிபட்டி, போடி, உசிலம்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 23 சுற்றுகளிலும், பெரியகுளம், கம்பம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா 22 சுற்றுகளிலும், சோழவந்தான் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 18 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.  
   வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு சட்டப் பேரவை தொகுதிவாரியாக 14 மேஜைகளுக்கு தலா ஒரு முகவர்களையும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேஜைக்கு ஒரு முகவரையும் நியமித்துக் கொள்ளலாம். வேட்பாளர்கள் தங்களது வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமிக்க உரிய படிவம் மூலம் மே 10-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
     வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்லிடப்பேசி கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மேஜைக்கு முன்பிருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணிக்கைக்கு நியமிக்கப்பட்ட முகவர்கள் அதற்கான வாக்கு எண்ணிக்கை மேஜை அருகிலிருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும். 
     தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
     வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும், சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 5 கருவிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வாக்கு எண்ணிக்கை நடத்தி, அவற்றுடன் இணைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் என்றார்.
     இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சி. ஜெயப்பிரிதா, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. கண்ணகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com