வருசநாடு அருகே மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி தடைவிதித்ததால் முழுமையான தார்ச்சாலையின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே நரியூத்து ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சி உள்ளது.
இந்த 2 ஊராட்சிகளுக்கும் இடையே தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் குறிப்பிட்ட தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.இதன் காரணமாக இப்பகுதியில் விளைகின்ற விளைபொருள்களை நகர்ப்பகுதிக்கு கொண்டு செல்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படும் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது.
இதுகுறித்து பலமுறை வனத்துறையினரிடம் முறையிட்டும் சாலை அமைப்பதற்கு தொடர்ந்து அனுமதி தர மறுக்கின்றனர். இதனால் அடிப்படை தேவைகளான சாலை வசதி கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் அவதியுற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முழுமையான சாலை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறியது, இதுகுறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்துள்ளோம் அதன்பேரில் அதிகாரிகளும் இப்பகுதியில் நேரில் வந்து ஆய்வு
செய்து விரைவில் தார்ச்சாலை அமைத்து தரப்படும் என்று தெரிவித்து சென்றனர். ஆனால் இது வரையும் தார்ச்சாலை பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதற்கு வனத்துறை அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்கள்.
எனவே தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இரண்டு ஊராட்சிகளை இணைக்கும் சாலையை உடனே செய்து சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.