தேனி

பெரியகுளத்தில் பெண்களின் புகைப்படத்தை "மார்ஃபிங்ட' செய்து மிரட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

31st Jul 2019 08:13 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அவர்களை மிரட்டி, பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம் கோல்டன் நகரைச் சேர்ந்த டேவிட் மகன் சத்யன் (51). இவர், பெரியகுளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், தேவாரத்தைச் சேர்ந்த பெத்தனாட்சி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பெண் குழந்தை உள்ள நிலையில், மனைவியை விவகாரத்து செய்துவிட்டாராம். அதன்பின்னர், எஸ்தர் ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவருக்கும் பெண் குழந்தை உள்ளது. அதையடுத்து, எஸ்தர் ராணியையும் விவாகரத்து செய்து விட்டாராம். 
இந்நிலையில், பெரியகுளத்தைச் சேர்ந்த பெண் வழக்குரைஞருடன் நட்பாகப் பழகிய சத்யன், அவருடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, அவரை மிரட்டி ரூ. 50 ஆயிரம் பணம் பறித்துள்ளார். தொடர்ந்து, அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.  
இதனிடையே, தனது பேருந்தில் பயணிக்கும் அல்லிநகரத்தில் பணிபுரியும் ஆசிரியையிடம் சத்யன் பழகி வந்துள்ளார். மேலும், ஆசிரியையின் புகைப்படத்தில் மார்ஃபிங் செய்து, வலைத்தளத்தில் பரப்பிவிடுவதாகக் கூறி மிரட்டி, அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
தொடர்ந்து, தென்கரையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அரசு ஊழியரிடம் பணம் கேட்கக் கூடாது என்றும், பணம் கேட்டால் காரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட இந்த 3 பேரும் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்யனை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT