ஆண்டிபட்டி அருகே அழகாபுரியில் உள்ள காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் சுவாமி கோயில்களின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டிபட்டி தாலுகா அழகாபுரியில் உள்ள காளியமன், பகவதியம்மன், முத்தாலம்மன் சுவாமி கோயில்களில் மகா கும்பாபிசேக விழாவையொட்டி புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இரண்டு நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்து, பல புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கொண்டு பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதி முடிந்து கலச குடம் புறப்பாடாகி விமான கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு மூலஸ்தானத்திலும் அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை அபிசேகங்கள் செய்யப்பட்டு , மகா அபிசேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, தேவராட்டம் நிகழ்ச்சியும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.