தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் சென்ற 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தமபாளையம் சார்- ஆட்சியர் ரா.வைத்திநாதன் தலைமையில் வருவாய்த் துறையினர் கம்பம்- கூடலூர் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பத்திலிருந்து குமுளியை நோக்கி வேகமாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அதில் தலா 50 கிலோ வீதம் 12 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. வருவாய்த் துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் காரை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.