தேனி

ஆண்டிபட்டி பகுதியில் நோய் தாக்குதலால் நாட்டுக்கோழிகள் இறப்பு: விவசாயிகள் கவலை

15th Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப்  பகுதிகளில் திடீர் நோய் தாக்குதலால் நாட்டுக்கோழிகள் இறந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்துடன் கால்நடை மற்றும்  கோழி வளர்ப்பு உப தொழில்களாக உள்ளன. இப்பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  
கிராமங்களில் குடியிருப்புகள், விவசாயம் சார்ந்துள்ள பகுதியில் விவசாயிகள் அதிகளவில் நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகின்றனர்.  கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் நாட்டுக்கோழிகள் கணிசமான வருவாய் ஈட்டித்தருகின்றன. 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நாட்டுக்கோழிகள் வெள்ளைக் கழிசல் நோயால் பாதிப்படைந்துள்ளன. நோய் தாக்கம் ஏற்பட்ட கோழிகள் இரை உண்ணாமல், காய்ச்சல் ஏற்பட்டு நான்கு நாட்களில் இறந்து விடுகின்றன. 
கிராமப்புறங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் பெரும்பாலும் மூடிய நிலையில் காணப்படுவதால் நாட்டுக் கோழிகளுக்கு சிகிச்சை  எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கிராமப்புறங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை முழுநேரமும் செயல்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: 
பண்ணைகளில் பாதுகாப்பாக வைத்து வளர்க்கப்படும் கோழிகளுக்கு தடுப்பூசி, மருந்து மாத்திரை உணவுடன் சேர்த்து கொடுக்க முடியும். ஆனால் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாட்டுக் கோழிகளை கண்டறிந்து அதனை கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றால் அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தடுப்பூசி போட முடியாமல் கோழிகள் இறந்து விடுகின்றன என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT