தேனி

ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

15th Jul 2019 07:36 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டியில் இந்து கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி  இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி நகரில் முருகன் தியேட்டர் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மொக்கராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் உமையராஜன், மாவட்ட பொதுசெயலாளர் முருகன், தேனி ஒன்றிய தலைவர் திலகராஜ் நிர்வாகிகள் கார்த்திக், நாகராஜ், ரவி, முனீஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். முன்னதாக  ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்  இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து  நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
உத்தமபாளையம்:  உத்தமபாளையத்தில் பிரசித்த பெற்ற  திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை உடனுறை கோயிலில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கேது பூஜை நடைபெறும்.  இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களிடம் தலா ரூ.300 வரையில் கோயில் நிர்வாகம் பூஜை கட்டணமாக வசூல் செய்கிறது. இந்த கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் உத்தமபாளையம் தேரடியில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கோம்பை கணேசன்,   நகரத்தலைவர் ராம் செல்வா, ஒன்றியத் தலைவர்  சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT