பெரியகுளம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேக்கு மர இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்டவை மாயமானதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர் .
பெரியகுளம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 1000 -க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகள் பயன்பாட்டிற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் தேக்கு மரத்தினால் ஆன இருக்கைகள் மற்றும் மேஜைகள் செய்யப்பட்டன.போதிய பராமரிப்பு இல்லாததால், இவற்றில் 100 -க்கு மேற்பட்டவை சேதமடைந்த நிலையில் காணப்பட்டன. இவற்றை ஏலம் விட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இவற்றை தற்போது ஏலத்தில் விட வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவை அனைத்தும் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இப் பொருள்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான தேக்கு மர இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்டவை மாயமானது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்ட போது அவர் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் செய்தனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு ) சுவாமிநாதன் கூறியது; உடைந்த மேஜைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை காணவில்லை என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமையாசிரியர் சுஜா செல்வி விடுப்பில் சென்றதால் அவரைத் தொடர்பு கொண்டு அவரது கருத்தை கேட்க இயலவில்லை என்றார்.
இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியது:
பள்ளிக்கு பயன்படுத்தப்பட்ட தேக்கால் செய்யப்பட்ட மேஜைகள், இருக்கைகள் பழுதடைந்துள்ளன. அவற்றை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தோம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவற்றை ஆய்வு செய்த போது, அவற்றை காணவில்லை. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்துள்ளோம் என்றனர்.