தேனி

ஹைவேவிஸ் மதுக் கடையால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

4th Jul 2019 07:41 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் இயங்கி வரும் அரசு  மதுக்கடை சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
 மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள  ஹைவேவிஸ் பேரூராட்சியானது இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், மலைக் குன்றுகள், நீர் விழ்ச்சிகள், நீர்நிலைகள், அணைக்கட்டுகள் என  சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் இடங்கள் பல உள்ளன. 
 பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த சாலை, நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கப் பட்டது. கடந்த சில மாதங்களாக   சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
 இந்நிலையில், ஹைவேவிஸ் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பேரூராட்சி சார்பில் இரு பயணிகள் விடுதிகள் உள்ளன. அதில் ஹைவேவிஸ் அணைக்கு அருகேயுள்ள விடுதியை  ஒட்டியே அரசு மதுபானக் கடை இயங்குவதால் விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
 மது அருந்துவோர் மதுபாட்டில்களை சாலையிலே உடைத்துப்போட்டுச் செல்வதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது குறித்து போரூரட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடத்தில் இயங்கும்  மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க மாவட்ட அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டது, ஆனால் நடவடிக்கை இல்லை என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT