தேனி

அரசுப் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் பாடப் புத்தகங்கள் வழங்கக் கோரிக்கை

4th Jul 2019 07:39 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவில் 50 -க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். 
 இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவிலான பாடப்புத்தகங்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது வழங்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்படும். 
 இந்நிலையில், நடப்பாண்டில் பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் குறைந்த அளவு பாடப்புத்தங்களே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 கடந்தாண்டுகளில் போதிய பாடப்புத்தகங்களை முன்கூட்டியே வழங்கி வந்ததால், பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெற்று வந்தனர்.
  ஆனால், நடப்பாண்டில் புத்தகங்கள் விநியோகம் செய்வதில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. 
அதன்படி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 
 இதனால், அதன்பின்னர் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், குறைந்த அளவு புத்தகங்களே வழங்கப்படுவதால், ஆசிரியர்களுக்கே  புத்தகங்கள் வழங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். 
எனவே, ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் பாடப்புத்தங்கள் விநியோகம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT